பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியுரப்பா மீது ஆளுநரிடம் புகார் அளித்ததற்காக அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கேரளா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக செல்லும் வழியில் மங்களூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

எடியூரப்பா அமைச்சரவையில் ஒரு அமைச்சர் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். முதலமைச்சர் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது ஈஸ்வரப்பா தனது ராஜினாமாவை தானாக முன்வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

தமது துறை சார்ந்த விவகாரங்களில் நேரடியாக தலையிடுவதாக எடியுரப்பாவுக்கு எதிராக ஈஸ்வரப்பா ஆளுநரிடம் புகார் அளித்து இருக்கிறார். முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று அவரின் கட்சித் தலைமைக்கு எழுதியிருந்தால், உட்கட்சி விஷயமாகக் கருதலாம்.

ஆனால் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதை பார்க்கும் போது மாநிலத்தில் நிர்வாகம் சரிந்துவிட்டதாக எண்ண தோன்றுகிறது. கர்நாடகாவில் கொரோனா பரவலை சரிபார்க்க விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மீறப்படுகின்றன என்று சிவகுமார் கூறினார்.