தக்கலை:
சீமான் அணிவித்த மாலையை அகற்றிவிட்டு, காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்குப் பாலாபிஷேகம் செய்ததாதல் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று மாலையில் கனிமவளக் கடத்தலைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது முதலே காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்திற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்காகத் தக்கலை வந்த சீமான், தக்கலை பேருந்து நிலையம் முன்புள்ள காமராஜர் சிலைக்குச் சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து சீமான் சென்றதும், அங்குத் தேசிய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமையில் திரண்ட ஹனுகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்குச் சீமான் அணிவித்த மாலையை அகற்றி வீசி எறிந்தனர். பின்னர் சிலையைத் தண்ணீர் ஊற்றிக் கழுவிச் சுத்தப்படுத்தி பாலாபிஷேகம் செய்தனர்.
மேலும், காமராஜர் சிலைக்குச் சீமான் மாலை போட்டதால், தங்கள் சிலையைச் சுத்தம் செய்ததாகத் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.