டில்லி
வரும் 10 ஆம் தேதி டில்லி நகரில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூட உள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்குப் பொறுப்பு ஏற்றுக் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தற்போதைய நிலையில் காங்கிரசுக்கு ராகுல் காந்தியின் தலைமை தேவை எனப் பல மூத்த தலைவர்கள் வற்புறுத்திய போதும் ராகுல் காந்தி அதை ஏற்கவில்லை.
ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியைத் தலைவராக்க முயற்சி நடந்தது. அவரும் காந்தி – நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர் இந்திரா காந்தியைப் போல் உள்ளதாலும் கட்சியினர் அவரை ஏற்றுக் கொள்வார்கள் எனப் பல தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால் பிரியங்கா தலைமை பதவியை ஏற்க மறுத்து விட்டார்.
அதையொட்டி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 7 பேரின் பெயர் தலைவர் பதவிக்காக தற்போது ஆலோசனையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் டில்லியில் வரும் 10 ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.