லக்னோ: உ.பி. மாநிலம் வாரணாசி சென்ற மத்திய அமைச்ச்ர ஸ்மிருதி ராணியை காங்கிரசார் தர்ணா செய்து தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் விவசாய மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், உ.பி. மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் இளம்பெண் கற்பழிக்கப்பட்டு, உயிரிழந்த விவகாரமும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உ.பி. மாநிலம் செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா, உ.பி. மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவமும் காங்கிரசாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், உ.பி. மாநிலம் அமேதி தொகுதி எம்.பி.யும், மத்தியஅமைச்சருமான ஸ்மிருதி ராணி இன்று உ.பி. மாநிலம் வாரணாசி சென்றார். அவரது வாகனத்தை காங்கிரஸ் கட்சியினர் மறித்து கெரோ செய்தனர். இதனால், அவரது வாகனம் நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திவிட்டு, ஸ்மிருதி ராணி கார் செல்ல வழிவகை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் ஆட்சியின்போது டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், அப்போதைய எம்.பி.யான ஸ்மிருதி ராணி மாபெரும் ஆவேசமான போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், தற்போது, ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் மவுனமாக இருப்பது ஏன் என எதிர்க்கட்சிகள்கேள்வி எழுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.