டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது என கோரிக்கை விடுத்து தொண்டர்கள் அவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தார். காக்கிரசின் தோல்விக்கு பொறுப்பு ஏற்று  செயற்குழுவிடம் தாம் ராஜினாமா செய்யப் போவதாக ராகுல் காந்தி அறிவித்தார். அவருடைய அறிவிப்பு செயற்குழுவில் பதற்றத்தை உண்டாக்கியது.

செயற்குழு மூத்த உறுப்பினர்கள் பலர் தற்போதுள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியின் தலைமை அவசியம் தேவை என கூறி ராஜினாமா முடிவை மாற்றிக் கொள்ள வற்புறுத்தினர். ஆயினும் அவர் முடிவை மாற்றிக் கொள்ளாமல் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை சந்திக்க முயன்ற பல மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் அவர் சந்திக்கவில்லை.

நேற்று முன் தினம் முதல் ராகுல் காந்தி தன்னுடைய தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்களில் ஒருவரான கே சி வேணுகோபால், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜிவாலா ஆகியோரை மட்டுமே சந்தித்துள்ளார். அவரை சந்திக்க ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலாத், துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் சென்ற போது அவர்களை சந்திக்க ராகுல் மறுத்துள்ளார்.

ராகுலின் ராஜினாமா முடிவால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று அவர் வீட்டு முன்பு டில்லி காங்கிரஸ் தலைவர் விஜய் ஜேட்டன் தலைமையில் கூடினார்கள். ராகுலின் ராஜினாமா முடிவை கைவிடக் கோரி அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறிது நேரத்தில் விடுதலை செய்தனர்.