மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 3ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜவை 2ம் இடத்துக்கு தள்ளியுள்ளது.
மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில் பாஜ, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. இதன் இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
முதல் கட்ட தேர்தலில் பாஜவும், 2ம் கட்ட தேர்தலில் தேசியவாத காங்கிரசும், 3ம் கட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் அதிக இடங்களை பிடித்துள்ளது
முதல் கட்டமாக 3,510 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பாஜ 851 இடங்களையும், காங்கிரஸ் 643 இடங்களையும், சிவசேனா தனித்து 514 இடங்களையும் கைப்பற்றியது.147 நகராட்சி தலைவர் பதவிகளில் 52 இடங்களில் பாஜ வெற்றி பெற்றது.
இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த 324 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் 91 இடங்களையும், பாஜ 81 இடங்களையும் கைப்பற்றியது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 3வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. அவுரங்காபாத், பந்தாரா, காத்சிரோலி, நந்தத் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 20 நகராட்சிகள், 2 நகர பஞ்சாயத்துகளுக்கு இந்த தேர்தல் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடந்தது.
முடிவில் காங்கிரஸ் 124 இடங்களிலும், பாஜ 119 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 77 இடங்களிலும், சிவசேனா 46 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதர இடங்களை சிறிய கட்சிகளும், சுயேட்சைகளும் வெற்ற பெற்றுள்ளனர்.
பாஜ, காங்கிரஸ் தலா 8 நகராட்சி தலைவர் பதவிகளையும், தேசியவாத காங்கிரஸ், சுயேட்சை, நகர் விகாஸ் ஆக்கத்தி தலா ஒரு நகராட்சி தலைவர் பதவியையும் கைப்பற்றியுள்ளது.
Congress Wins 3rd phase of Local Body elections.