டில்லி
ஒரு மாதத்துக்கு தொலைகாட்சி விவாதங்களுக்கு பிரதிநிதிகளை அனுப்ப கூடாது என காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த அதிர்ச்சி தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செயற்குழுவில் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். ஆனால் அதை மூத்த செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். தற்போதைய நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியே பொருத்தமானவர் என அவர்கள் கூறினார்கள்.
நேற்று பல மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் ராகுல் காந்தி தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். தெலுங்கானா காங்கிரஸ் செயலர் பொல்லு கிஷன் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை எதிர்த்து இன்று காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி ராகுலை தொடர்ந்து பதவியில் நீடிக்க கோரி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.
டில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்சித் ராகுல் காந்தியை தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது கோரிக்கையை வலியுறுத்த ராகுல் இல்லத்துக்கு வந்த ஷீலா தீட்சித் உனடியாக திரும்பினார். ராகுலை அவர் சந்தித்தாரா என்னும் கேள்விக்கு விடையளிக்க மறுத்துள்ளார்.
டில்லி காங்கிராஸ் தொண்டர்கள் நேற்று இதே கோரிக்கையை வலியுறுத்தி ராகுல் காந்தி இல்லத்துக்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தனர்.
இது பல தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளில் கேள்விக்குறிய விஷயமாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போதுள்ள நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரையிலாவது ராகுல் காந்தி தலைமை பதவியில் நீடிக்க வேண்டும் என விரும்புகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி தேவையற்ற தொலைக்காட்சி விவாதங்களை தவிர்க்க விரும்புவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் மூலம், “இன்னும் ஒரு மாதத்துக்கு பிரதிநிதிகள் யாரையும் எந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்துகும் அனுப்பப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களையும் தங்கள் விவாதத்தில் கலந்துக் கொள்ள காங்கிரஸ் பிரதிநிதிகளை அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என பதிந்துள்ளார்.