நெல்லை:
நாங்குநேரி தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நாங்குனேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக நாங்குனேரி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில், எச்.வசந்தகுமாரின் மகனை களமிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற லோக்சபா தேர்தல் உடன்பாடு காரணமாக, நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிடும் என திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திருநெல்வேலி கிழக்கு, மேற்கு மற்றும் மாநகர மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு.சஞ்சய் தத் செயல் தலைவர்கள் திரு.H. வசந்த குமார் MP, திரு.மயூரா ஜெயக்குமார் மற்றும் மாவட்ட தலைவர்கள் திரு.சங்கரபாண்டியன்,திரு. சிவக்குமார்,திரு.பழனி நாடார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.