சிவகங்கை: பிரதமரின் போர் நிறுத்த முயற்சியை  காங்கிரஸ் வரவேற்பதாக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான  ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

இஸ்ரேல் காஷா இடையே ஏற்பட்டுள்ள போர் 3வது உலக போராக மாறும் சூழல் உருவாகி வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி ஏற்கனவே இஸ்ரேல் பிரதமர் மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷிய பிரதமர்களிடம் பேசினார். செப்டம்பர் 30 அன்று  இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி போர் நிறுத்தம் தொடர்பாக  பேசினார்.  இதுகுறித்து கூறிய பிரதமர் அமாடி,  “மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் நெதன்யாகுவிடம் பேசினேன். நமது உலகில் தீவிரவாதத்திற்கு இடமில்லை. பிராந்திய விரிவாக்கத்தைத் தடுப்பதும், பணயக்கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்வதும் முக்கியமானது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது” என்று  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  ‘பிரதமரின் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் நிறுத்த முயற்சியை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்கின்றன’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கையில்  செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம்,  இஸ்ரேல், பாலஸ்தீனம் போரால் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்கிறதா என்பதை மத்திய அரசுதான் விளக்க வேண்டும். போரை நிறுத்த பிரதமர் மோடி முயற்சிக்கிறார். அதை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்கின்றன. ஈரானில் உற்பத்தி குறைந்தால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அமெரிக்காவில் கச்சா எண்ணெய்யும், ரஷ்யாவில் எரிவாயும் உற்பத்தி செய்யப்படுவதால், கடுமையான விலை உயர்வு இருக்காது.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்படும் என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. காங்கிரஸ்ஆட்சி அமைத்ததும் முழு மாநிலஅந்தஸ்து பெற வலியுறுத்துவோம். தமிழகத்தில் திமுக கூட்டணி வரும் தேர்தலிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றவர்,

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது,  மெரினாவில் விமானப்படை வீரர்களின் வான்வெளி சாகசம் வரவேற்கத்தக்கது. அதைக்காண கூடியிருந்த மக்கள் கூட்ட நெரிசலில் இறந்ததாகத் தெரியவில்லை. மயக்கம், ஏற்கெனவே இருந்த நோய்களால் இறந்ததுபோல் தெரிகிறது. இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றார்.

அதுபோல  இருமாநில தேர்தல் முடிவுகள் தொடர்பான கேள்விக்கு,  ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என, எங்களது கட்சியினரும், அரசியல் நோக்கர்களும் கூறுகின்றனர். கருத்து கணிப்புகளை நான் ஏற்பதில்லை என்று தெரிவித்தார்.