டெல்லி: மேற்கு வங்கத்தில் ரூ.50லட்சத்துடன் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பிடிபட்டனர்.  இது ஜார்க்கண்ட் அரசை கவிழ்பதற் கான பா.ஜ.க.வின் சதி என காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில், பணத்துடன் பிடிபட்ட 3 எம்எல்ஏக்களையும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துளளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார். அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ஜம்தாரா தொகுதி எம்.எல்.ஏ. இர்பான் அன்சாரி, கிஜ்ரி தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் கச்சாப் மற்றும் கோலேபிரா எம்.எல்.ஏ. நமன் பிக்சல் ஆகியோர் கடந்த சனிக்கிழமை மாலை மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஒரு எஸ்.யு.வி. வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.  அந்த வாகனத்தை மேற்கு வங்க போலீசார் சோதனையிட்டனர். அப்போது வாகனத்தின் உள்ளே பெரும் பணம் இருப்பதை போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். சுமார் ரூ.50 லட்சம் இருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  ஜார்க்கண்டில் ஆட்சியை சீர்குலைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

ஆனால், இதை மறுத்த மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அர்ஜூன் முண்டா , காங்கிரஸூக்கு மற்றவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி தங்கள் சொந்த தவறுகளை கம்பளத்தின் கீழ் துடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. காரிலிருந்து மீட்கப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது என்பதை அவர்கள் (காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்) விளக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்தப் பணம் யாரிடம் பெறப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மேற்குவங்காளத்தில் காரில் பணத்துடன் பிடிபட்ட 3 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சித்து வருவதாகவும், இதற்காக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.