பொது சிவில் சட்டம் சாத்தியமா? காங் vs பாஜக கருத்துப்போர்.

Must read

இஸ்லாமிய சமூகத்தின் கடும் எதிர்ப்பிற்கு ஆளாகியுள்ள பொது சிவில் சட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட சாத்தியமேயில்லை என்று காங்கிரசும், கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று பாஜகவும் வார்த்தைப் போரில் இறங்கியுள்ளன.

ucc

மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவர் அசாத்தீன் ஓவாய்சி, பொது சிவில் சட்டம் என்பது முழுக்க முழுக்க இஸ்லாமியரை குறிவைத்தே கொண்டுவரப்படுகிறது, இதை அமல் படுத்துவதன் மூலம் பாஜக அரசு இந்தியாவின் பன்முகத்தன்மையை கொலை செய்யப்பார்க்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். இந்தியாவின் அழகே வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னத தன்மைதான். இதை முற்றிலும் பாழ்படுத்தும் முயற்சியே பொது சிவில் சட்டமாகும் என்றும், இது தலித் மற்றும் பழங்குடி மக்களின் பண்பாட்டையும் பாதிக்கும் என்றும் கவலை தெரிவிக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான வீரப்ப மொய்லி இந்தியாவில் பற்பல வேறுபட்ட சமுதாயங்கள் வாழ்ந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 200-300 விதமான தனிப்பட்ட சட்டங்கள் அவர்களுக்குள் இருக்கிறது. இதுபோன்ற சூழலில் அத்தனை பேரையும் ஒரே சட்டத்துக்குள் கொண்டுவந்து திணிப்பது என்பது முற்றிலும் சாத்தியமற்றது என்கிறார்.
இதுபற்றி பாஜகவின் தேசிய செயலாளர் சித்தார்த்நாத் சிங் கூறுகையில் சட்ட கமிஷன் இதுபற்றி பல்வேறு தளங்களிலிருந்து கருத்துக்களை திரட்டிக்கொண்டிருக்கிறது. நாங்கள் இஸ்லாமியரும் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்கள் மாத்திரம் தனியாக எத்தனைகாலம் இருப்பார்கள்? அனைவருக்கும் ஒரே சட்டம் என்பது தேசிய கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டுமேயொழிய மதக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படக் கூடாது என்று கருத்து தெரிவித்திருகிறார்.

More articles

Latest article