டில்லி

மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

டில்லி எல்லையில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தடுப்புகளை மீறி டில்லி எல்லைக்குள் நுழைய முயன்ற நிலையில் அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். இந்த மோதலால் டில்லி எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம்,

”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் சிறந்த விவசாய தலைவரான சரண் சிங்கிற்கும், பசுமைப் புரட்சியின் தந்தையான சுவாமிநாதனுக்கும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது. நாங்கள் அந்த முடிவை வரவேற்கிறோம். மிகச்சிறந்த இரு தலைவர்களுக்கு பாரத ரத்னா அறிவித்துள்ள மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைக்கிறது. மோடி அரசு விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதங்களை நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்” 

என்று தெரிவித்துள்ளார்.