சேலம்: அக்னிபாத்  திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும்  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சேலம் வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  மோடி அரசு கொடுமையான திட்டமாக அக்னிபாதையை கொண்டு வந்திருக்கிறது.4 ஆண்டுகள் ராணுவத்தில் வேலை என்று இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடும் வகையில் இத்திட்டத்தை திணிக்கிறார்கள்.

4ஆண்டு ஆயுத பயிற்சியை கொடுத்து,பிறகு அவர்களை ஆர்எஸ்எஸ்,பாஜவின் ஆயுதம் தாங்கிய தனிப்படையாக வைத்துக்கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள். 4 ஆண்டுக்குப் பிறகு நடக்கும் தேர்தலின் போது,வாக்குச்சாவடிகளில் அவர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளனர். ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை ஆயுதம் தாங்கிய அணியிடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் இத்தகைய சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும்.

அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக வரும் 27ம்தேதி தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,  அதிமுக பொதுக்குழுவில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் வருந்தத்தக்கது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் நல்ல நண்பர்கள். அவர்கள் கருத்து வேறுபாடுகளை நாகரீகமான முறையில் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து, ஜூன் 27ந்தேதி காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்…!