டெல்லி:

சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதாக தகவல் வெளியான நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு முன்பு காங்கிரஸ் கட்சியினர் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திரா காந்தி மரணத்துக்கு பிறகு, ராணுவத்தின் ஒரு பிரிவினரால் எஸ்பிஜி என்ற பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இந்த படையினர், முன்னாள் பிரதமர்கள், மற்றும் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்த பாதுகாப்பை குறைப்பது தொடர்பாக மத்தியஅரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (Sonai Gandhi), அவரது மகன் ராகுல் காந்தி (Rahul Gandhi) மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ராவிற்கு (Priyanka Gandhi) இனி மத்திய அரசின், ‘எஸ்பிஜி’ (SPG) பாதுகாப்பு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இனி காந்தி குடும்பத்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்புதான் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர், டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டிற்கு வெளியே போராட்டத்தில் குதித்தனர்.

இதுகுறித்து கூறிய காங்கிரஸ் தலைவர் வேணுகோபால்,  “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா, தனிப்பட்ட முறையில் இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை இந்த சம்பவத்தின் மூலம் வெளிக்காட்டி வருகிறார்கள்,” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.