காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற நிலையில், மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்ற யூகம் கிளம்பியது. ஆனால், அனைத்து மாநிலத் தலைவர்களையும் அதே பொறுப்பில் நீடிப்பார்கள் என்று ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக சமீபத்தில் ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு நடைபெற்ற இமாச்சல் பிரதேசத்தில் தோல்வி அடைந்தது. குஜராத்தில் கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகளை வென்றிருந்தாலும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
ஆனாலும் ராகுல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என காங்கிரஸ் தொண்டர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
இந்த நிலையில் நாடு முழுதும் உள்ள மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்ற யூகம் கிளம்பியது.
ஆனால், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜனார்தன திவேதி பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்கள் அதே பதவியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் அதே பதவியில் நீடிப்பார்.
அதே நேரம், டில்லி மகளிர் காங்கிரஸ் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா நியமிக்கப்பட்டுள்ளார். பரேஷ் தனானி குஜராத் சட்டப்பேரவை தலைவரக நியமிக்கப்பட்டுள்ளார்