டெல்லி: உதய்பூரில் நடைபெற உள்ள 3 நாள் சிந்தன் ஷிவிர் மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 4 குழுக்களை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் தலைமையில் அமைத்துள்ளார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது 2024ம் ஆண்டு ஆட்சியை பிடிப்பது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் (சிந்தன் ஷிவிர்) அடுத்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற உள்ளது. மே மாதம் 13, 14, 15ந்தேதி ஆகிய நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி தொடர்பாக பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக 4 குழுக்களை அமைத்து, அதன் தலைவர்களாக கார்கே, ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், ஹூடா ஆகியோரை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அறிவித்து உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு தொடர் தோல்வியை தழுவி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கபில்சிபில், குலாம்நபி ஆசாத் உள்பட மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா தலைமையைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். காங்கிரசை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தலைமையேற்க காங்கிரஸ், பாஜக தவிர்த்து மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க, முதல்வர்கள் மம்தா, சந்திரசேகராவ் போன்றோர் களமிறங்கி, அணி திரட்டி வருகின்றனர். இதுபோன்ற நிலை உருவானால், அது பாஜகவுக்கு சாதகமாக மாறிவிடும் என்பதால், பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் திட்டங்களை தயாரித்து கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சோனியாகாந்தி உள்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் 4 முறை ஆலோசனை நடத்தி உள்ளதுடன், தானும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின்படி கட்சியின் மாற்றங்களை செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகங்களை ஆராய 3 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார். இந்த திட்டங்கள் உண்மையில் காங்கிரஸிற்கு பயனுள்ளதா, பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கலாமா என்பது குறித்து அவர்கள் ஒரு வாரத்திற்குள் அளிக்கும் அறிக்கையை வைத்து சோனியா காந்தி முடிவெடுப்பார் என தெரிகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் காங்கிரஸ் நிர்வாகிகளை முழுமையாக மாற்றி அமைக்க சோனியா திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் (சிந்தன் ஷிவிர்) ராஜஸ்தானின் உதய்ப்பூரில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த சிந்தன் ஷிவிர் கூட்டத்திற்காக மூத்த தலைவர்களைக் கொண்ட 4 குழுக்களை சோனியா காந்தி அறிவித்துள்ளார். அதன்படி,
அரசியல் குழுவுக்கு, நாடாளுமன்ற ராஜ்யசபா காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் குலாம்நபி ஆசாத், அசோக் சவான், உத்தம்குமார் ரெட்டி, சசிதரூர், கவுரவ் கோகாய், சப்தகிரி சங்கர் உலகா, பவான் கெரா, ரஜினி நாயக் ஆகிய 8 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பொருளாதார குழுவுக்கு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடன் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஆனந்த் சர்மா, சச்சின் பைலட், மனிஷ் திவாரி, ராஜீவ் கவுடா, பிரநிதி ஷின்டே, பேராசிரியர் கவுரவ் வல்லப், திருமதி சுப்ரியா ஸ்ரீநாட்டே ஆகியோர் கொண்ட 8 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் மற்றும் விவசாயம் சம்பந்தமான குழுவுக்கு மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா கன்வீனராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடன் மேலும் 8 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, .டி எஸ் சிங்டியோ, சக்திசிங் கோஹில், நானா பட்டோலே, பிரசாத்சிங் பாஜ்வா, அருண் யாதவ், டாக்டர் அகிலேஷ் பிரசாந்த் சிங், திருமதி கீதா கொரோ, அஜய்குமார் லல்லு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சமூக மற்றும் அதிகாரமளித்தல் குழு ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடன் உறுப்பினர்களாக திருமதி மீரா குமார், திக்விஜ்ய்சிங், குமமாரி செல்ஜா, சுக்பீர்சிங் ரந்தவா, நபம் துகி, நரன்பாய் ரத்வா, ஆன்டோ அந்தோனி, கே.ராஜு கொண்ட மொத்தம் 9 பேர் இடம்பெற்றுள்ளனர்.