திருவனந்தபுரம்: கேரளத்தில்  மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, இன்று பதவி ஏற்கிறது. முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.டி. சதீசன் தலைமையிலான  21 அமைச்சர்கள்   கொண்ட காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பதவி ஏற்கிறது.

இந்த பதவி ஏற்பு விழாவில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்வர்கள் கலந்துகொள்கிறார்கள்.

நடைபெற்று முடிந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த, முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான  இடதுசாரி கூட்டணிக்கு இம்முறை 35 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. பாஜ முதன் முதலாக 3 தொகுதிகளை கைப்பற்றியது.

இதற்கிடையே இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும்,  முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும், எம்பியுமான கே.சி. வேணுகோபால், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் வி.டி. சதீசன் ஆகியோர் போட்டி போட்டனர். இதுதொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் வி.டி. சதீசனை முதல்வராக காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்தது.

இதைத்தொடர்ந்து புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள விடி சதீசன் கவர்னர் அர்லேகரை சந்தித்து,  ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை வைத்தார். அப்போது 21 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலையும் வழங்கினார்.

இதையடுத்து இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. திருவனந்தபுரம் மத்திய ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல்வர் வி.டி. சதீசன் உள்பட 21 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.  பதவியேற்பு விழா மேடையில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது என்று கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்பி., தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  ஆனால், அவர் கலந்துகொள்வது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

கேரள அமைச்சரவை பட்டியல்: 

வி.டி. சதீசன் (முதல்வர்), ரமேஷ் சென்னித்தலா, முரளீதரன், சன்னி ஜோசப், லிஜு, விஷ்ணுநாத், ஏ.பி. அனில்குமார், ரோஜி எம். ஜான், பிந்து கிருஷ்ணா, சித்திக், துளசி, ஓ.ஜே. ஜெனீஷ், குஞ்ஞாலிக்குட்டி, மோன்ஸ் ஜோசப், ஷிபு பேபி ஜான், கே.எம். ஷாஜி, என். சம்சுதீன், பி.கே. பஷீர், அனூப் ஜேக்கப், சி.பி. ஜான், வி.இ. அப்துல் கபூர். மந்திரிசபையில் காங்கிரஸ் சார்பில் 11 அமைச்சர்களும், முஸ்லிம் லீக் சார்பில் 5 அமைச்சர்களும் உள்ளனர். சபாநாயகர் பதவி முன்னாள் அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]