போபால்:

த்தியபிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தில் ரூ.2 லட்சம் வரையிலான  விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து பாஜகவினர்  விமர்சித்து வந்த நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பதவி ஏற்றது முதல் இதுவரை 21 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்துள்ள தாக தெரிவித்த மாநில காங்கிரஸ் அரசு அதற்கான ஆவணங்களை முன்னாள் மாநில பாஜக முதல்வர் சவுகான் வீட்டிற்கு கொண்டு சென்று சமர்ப்பித்ததுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மத்தியபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற  காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டு (2018) டிசம்பர் 17ந்தேதி பதவி ஏற்றது. மாநில முதல்வராக கமல்நாத் பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து முதல் அறிவிப்பாக ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

முன்னாள் பாஜக முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானிடம் காங்கிரஸ் தலைவர்கள் விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான ஆவணங்களை  ஒப்படைத்த காட்சி

இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேல்தல் நடத்தை விதிகளால், மாநில அரசின் நலத்திட்டங்கள் முடங்கின. இதை பாரதிய ஜனதாக கட்சியினர் தங்களது அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது, மாநில அரசு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யவில்லை என்று  முன்னாள் பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாநிலத்தில் இதுவரை  21 லட்சம் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்த மாநில அரசு, அதற்கான ஆதாரங்களை, சவுகான் இல்லத்திற்கு எடுத்துச் சென்று, அவரிடம் சமர்ப்பித்தது.

காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சூரி தலைமையில் ஏராளமான காங்கிரசார், இன்று  திறந்த ஜீப்பில், விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான ஆவணங்களுடன்  முன்னாள் முதல்வர் சவுகான் வீட்டை அடைந்தனர். அங்கு, சவுகானை சந்தித்த வர்கள், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆவணங்களை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பச்சூரி, காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்தபடி, விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியதை கமல்நாத் தலைமையிலான மாநில காங்கிரஸ் அரசு  நிறைவேற்றி உள்ளது.

ஜெய் ஜவான் ஜெய் கிஷான் திட்டத்தின் கீழ் இதுவரை 21 லட்சம் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யப்பட்டுள்ளது., தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், மேலும் கடன் வாங்கிய விவசாயிகளின்  கடன்களை ரத்து செய்ய முடியாத நிலை தொடர்கிறது என்று தெரிவித்தவர், மாநிலம் முழுவதும் 55 லட்சம் விவசாயிகளின் கடன்கள் இந்த திட்டத்தின்படி தள்ளுபடி செய்ய இருப்பதாகவும், தேர்தல் நடத்தை விதி முறைகள் முடிவுக்கு வந்ததும்,  மீதமுள்ள விவசாயிகளின் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.