லூதியானா:

அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் விரும்புவதுபோல், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் எம்பி. ரவ்னீத் சிங் பிட்டு யோசனை கூறியுள்ளார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மனிதாபிமானமற்ற செயல். பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதை தடுக்க, அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப அதிபர் ட்ரம்ப் விரும்புவது போல், நாமும் எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும்.

உயிர் தியாகம் செய்த 40 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பாகிஸ்தானுடனான வர்த்தகம் உட்பட அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு மறக்கமுடியாத பாடத்தை இந்தியா கற்பிக்கவேண்டும்” என்றார்.

லூதியானா காங்கிரஸ் எம்பியான ரவ்னீத் சிங் பிட்டு, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பீந்த் சிங் பேரன் ஆவார். பீந்த் சிங் காலிஸ்தான் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.