டில்லி

மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி  எழுப்பி உள்ளனர்.

நேற்று இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.  இதனால் மக்கள் தங்கள் வசமுள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மூலமாக வரும் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மாற்றலாம் என அறிவித்துள்ளது.  வங்கிகள் அந்த நோட்டுக்களைப் பொதுமக்களுக்கு வழங்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டிவிட்டரில்,

“முன்னர் செய்த பணமதிப்பிழப்பு மூலம் நீங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் மீது ஆழமான புண்ணை ஏற்படுத்தினீர்கள். அந்த நடவடிக்கையால் தேசத்தின் ஒட்டுமொத்த அமைப்புசாரா தொழில்களும் அழிந்துபோயின. நிறைய குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அழிக்கப்பட்டன.

இப்போது இரண்டாவது முறையாகவும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்துள்ளீர்கள். முதலில் செய்த தவறுகளை மூடி மறைக்க இரண்டாம் முறையாகப் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ளதா? இந்த ஒட்டுமொத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் குறித்து சுதந்திரமான நடுநிலையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அத்தகைய விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும்”

என்று குறிப்பிட்டுள்ளார்

முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், தற்போதைய சுயேச்சை எம்,பி.யுமான கபில் சிபல்,

“கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் மதிப்பு ரூ.17.7 லட்சம் கோடி. அது அத்தனையுமே ஊழல் பணம் என்பது போல் மத்திய அரசு வாதிட்டது. ஊழலை ஒழிக்க ரூ.1000, ரூ.500 நோட்டுகளைப் பணமதிப்பிழப்பு செய்ததாகக் கூறுகிறது. இப்போது 2022-ல் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கை ரூ.30.18 லட்சம் கோடி. அப்படியென்றால், 2016-ல் இருந்ததைவிட இப்போது ஊழல் பணத் தொகை அதிகரித்துள்ளதா பிரதமர் அவர்களே”

என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரப் பிரிவு தலைவர் பவன் கேரா ,

“ஒரு பிரதமர் தன் அரசு அச்சடித்த நோட்டுகளைத் தொடர்ந்து 7 ஆண்டுகள் கூட வைத்திருக்க முடியாத சூழலில் எங்களைப் பார்த்து 70 ஆண்டுகளாக நாட்டிற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள்”

என்று கிண்டல் அடித்துள்ளார்.