கோவை: வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தேர்தல் பிரசாரத்துக்கா வயநாடு செல்லும் வழியில், நீலகிரி மாவட்டத்தில் இறங்கி, அங்குள்ள பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவிகளை சந்தித்து உரையாடினார்.
பிரியங்கா காந்தி இன்றுமுதல் 2 இரண்டு நாட்கள் வயநாடு தொகுதியின் பல பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.
வயநாடு மக்களவை தொகுதிக்கு நவ.13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முதன்முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில், போட்டியிடுகிறார். இதற்காக அவர் ஏற்கனவே தனது சகோதரர் ராகுல் மற்றும் குடும்பத்தினருடன் வயநாடு வந்து ரோடு ஷோவில் பங்கேற்றதுடன், வேட்புமனுவையும்தாக்கல் செய்தார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு உள்ளது.
வயநாட்டில் பிரியங்காவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர்.
வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதால், காங்கிரசார் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, இன்று வயநாட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்கு வயநாடு வருகை தந்தார். முன்னதாக அவர் வந்த வழியான தமிழ்நாடு கேரள எல்லைப்பகுதியான, தாளூருக்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அவரை வரவேற்றனர். அவர்களுடன் கைகுலுக்கி நன்றி தெரிவித்த பிரியங்கா அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். இதைத்தொடர்ந்து வயநாடு புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏவும், வயநாடு தேர்தல் பிரசார பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளருமான அனில் குமார், “வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி இன்று முதல் 2 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று சுல்தான்பத்தேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனங்காடி, மானந்தவாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனமரம், கல்பெட்டா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வைத்திரி அருகே பொழுதனா பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
நாளை,. திருவம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏங்கப்புழா, எரநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேரட்டுங்கல், வாண்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாம்பாடு, நிலம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலம்பூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார்.
தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பும் அவர், மீண்டும் ஒரு முறை பிரசாரம் செய்ய வருவார்” என்று அவர் கூறினார்.