டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, நாளை காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது.  கொரோனாவின் 2வதுஅலையை கட்டுப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளது.  உருமாறிய வகையில் பரவி வரும் கொரோனாவானது, எந்தவித அறிகுறியையும் முன்னதாக  வெளிப்படுத்தாததால், தொற்று பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

தொற்று பரவலை தடுப்பதில் மோடி அரசு தோல்வி கண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ராகுல்காந்தி,  தொற்று பரவலை தடுக்க  மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.  சுகாதாரத்துறை நிபுணர்களும் அதையே வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்  தலைவர் தலைவர் சோனியா காந்தி நாளை காணொளி காட்சி வாயிலாக மக்களவை எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, தொற்று பாதிப்பு நிலவரம், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஆக்சிஜன் பற்றாகுறை உள்பட பல நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனை கூட்டமானது காணொளி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.