தமிழக சட்டமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது காங்கிரஸ்.
2011 ம் ஆண்டு 63 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது, 2016 ம் ஆண்டு 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.
2016 ம் ஆண்டு 178 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களை மட்டுமே தி.மு.க. வால் பெற முடிந்தது, அதனால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கியது தான் என்ற கருத்து தி.மு.க.வினரிடையே எழுந்தது.
இதன் காரணமாக, இந்த முறை 18 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்று தி.மு.க. எடுத்த எடுப்பிலேயே திட்டவட்டமாக கூறியது. இது இரு கட்சிகளுக்கும் இடையிலான 15 ஆண்டு கால கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ என்ற நிலை எழுந்தது.
காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் தேசிய தலைவர்களின் பல கட்ட சமரச பேச்சுவார்த்தைக்குப் பின், அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க. மற்றும் பா.ம.க. வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட கூடுதலாக, 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீடு இறுதி முடிவானது.
குறைந்த தொகுதி கிடைத்ததால், தாங்கள் கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே உட்கட்சி குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த தடைகளை எல்லாம் தாண்டி, காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 ஐ கைப்பற்றி 72 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. வுடன் உதகமண்டலம், காரைக்குடி, குளச்சல், விளவங்கோடு, கோவை தெற்கு ஆகிய ஐந்து தொகுதிகளில் நேரடியாக களம் கண்ட காங்கிரஸ் கட்சி கோவை தெற்கில் மட்டும் தோல்வி அடைந்து மற்ற நான்கு தொகுதிகளிலும் குறிப்பிடும்படியான வெற்றியை பெற்றுள்ளது.
மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்னனை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தோற்கடித்து அமோக வெற்றி பெற்றுள்ளார்.
நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்