ஈரோடு:

தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும் என்று கூறிய பிரதமர் மோடி இப்போது என்ன செய்கிறார்? என்று ஈவிகே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார். தமிழக காங்கிரஸ் கட்சியின், கட்சி தேர்தல் ஆய்வுக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடந்தது.

இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “மோடி அரசு அறிவித்த ஜி.எஸ்.டி. வரியால் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நெசவாளர்கள் ஜவுளி துறையினருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜி.எஸ்.டி. வரி கொண்டுவரப்பட இருந்தது.

அப்போது  மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “என் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி. வரும்” என்று ஆவேசமாக கூறினார். அப்படி சொன்ன மோடி இப்போது என்ன செய்கிறார்? தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுவுக்கு எதிராக போராட்டம் போன்ற பெண்கள் நடத்தும் போராட்டத்தை கிண்டல் செய்கிறார். .

இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருக்கிறது. குற்றங்கள் குறைந்து விட்டது என்கிறார். சட்டம்-ஒழுங்கு புத்தகத்தில்தான் ஒழுங்காக உள்ளது.ஆனால் தமிழ்நாட்டில் குற்றங்கள் பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்தில் காங்கிரஸ் தயவு இல்லாமல் யாரும் இனி ஆட்சி அமைக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகியோர் காங்கிரஸ் தயவால்தான் முதல்-அமைச்சர்கள் ஆனார்கள் என்பது வரலாறு. ஆகவே இனியும் காங்கிரஸ் துணை இல்லாமல் யாரும் முதல்வர் ஆகி விட முடியாது. பா.ஜ.அரசை அ.தி.மு.க. கை நீட்டி பேச பயப்படுகிறது.

அப்படி பேசினால் மறுநாள் நாம் எங்கே கம்பி எண்ண போய்விடுவோமோ.. என்று அஞ்சுகிறார்கள். இதனால் தான் மாறிமாறி ஒவ்வொருவரும் பா.ஜ.க காலடியில் விழுந்து கொண்டு இருக்கிறார்கள்” இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கட்சி தேர்தல் ஆய்வுக்கூட்டத்தில் வாழப்பாடி ராம.சுகந்தன், ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, துணை தலைவர் ராஜேஸ் ராஜப்பா, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணை தலைவர் பாட்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.