டில்லி
மத்திய அரசு புதிய நாடாளுமன்றத்தில் வழங்கிய அரசியல் சாசன நகல்களில் மதச்சார்பற்ற, சமத்துவம் உள்ளிட்ட வார்த்தைகள் இல்லாததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவ்த்துள்ள்து.
நேற்று முன்தினம் டில்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. இங்கு அலுவல்கள் தொடங்கிய முதல் நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் சாசனத்தின் நகல்கள் வழங்கப்பட்டு இருந்தன. நகல்களின் முன்னுரையில், ‘மதச்சார்பற்ற’, ‘சமத்துவம்’ போன்ற வார்த்தைகள் இல்லை எனவும், மத்திய அரசு அவற்றை நீக்கி இருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம்,
”நாங்கள் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கொண்டு சென்ற அரசியல் சாசன நகல்களின் முன்னுரையில் ‘மதச்சார்பற்ற’, ‘சமத்துவம்’ போன்ற வார்த்தைகள் இல்லை. மத்திய அரசு புத்திசாலித்தனமாக அவற்றை நீக்கி உள்ளனர். இது மிகவும் தீவிர விவகாரம். இதை நாங்கள் எழுப்புவோம்’
எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் கூறுகையில், ‘நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நகல்கள் அசல் அரசியல் சாசனத்தின் நகல்கள். இந்த வார்த்தைகள் பிறகு சேர்க்கப்பட்டவைதான்’ எனக்கூறினார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதற்கு,
‘கடந்த 1976 ஆம் வருடம் அரசியல் சாசனத்தில் மேற்படி வார்த்தைகள் சேர்க்கப்பட்டது என்பது எனக்கும் தெரியும். இன்று ஒருவருக்கு அரசியல் சாசன நகல் வழங்கப்பட்டால், அது இன்றைய பதிப்பாகவே இருக்க வேண்டும். இது என்னைப் பொறுத்தவரை ஒரு மிகத் தீவிர பிரச்சினை. இந்த விவகாரத்தில் அவர்களது நோக்கம் தெளிவாக இல்லை என்பதால், இது குறித்துச் சந்தேகப்படுகிறேன்”
என்று பதிலளித்தார்..
இதைப்போல பல்வேறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு மத்திய அரசைக் குறைகூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.