டில்லி

ர்நாடகா அரசை கலைக்கும் முயற்சியின் பின்னணியில் மத்திய பாஜக தலைவர்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் மஜத ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்  சிலர் ஆதரவை விலக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அதை ஒட்டி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளுநர் உரையின் போது பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதனால் ஆளுநர் தனது உரையை பாதியில் நிறுத்தி விட்டு வெளியேறினார்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய அவையை நடத்த விடாமல் பாஜகவினர் தொடந்து அமளி செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக தலைவர் எடியூரப்பா பேசியதாக ஒரு ஆடியோ டேப் ஒன்றை முதல்வர் குமாரசாமி வெளியிட்டார். அதில் அவர் மஜத உறுப்பினர் ஒருவரிட்ம் ஆட்சியை கலைக்க ரூ.10 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டில்லியில் இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் மற்றும் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், ”கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியின் பின்னணியில் மத்திய பாஜக தலைவர்கள் உள்ளனர்.

மத்திய அரசு மாநில அரசை முடக்க முயல்கிறது. எடியூரப்பாவின் ஆடியோ பதிவில் அவர் அமித் ஷா நீதிபதிகளை கவனித்துக் கொள்வார் எனக் கூறி நீதியை அவமானப் படுத்தியதற்காக அவர் மீது தலைமை நீதிபதி தன்னிச்சையாக வழக்கு தொடர வேண்டும். இந்த விவகாரம் குறித்து எங்கள் கட்சியினர் பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை பேச உள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவையில் 20 உறுப்பினர்களை வாங்க பாஜக எப்படி ரூ.450 கோடியை ஏற்பாடு செய்ய உள்து என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். அத்துடன் அந்த பணத்தை பாஜக அளிக்குமா அல்லது பிரதமர் அலுவலகம் அளிக்குமா அல்லது வேறு யாரும் அளிப்பார்களா? என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

இந்த ஆடியோ பதிவின் மூலம் பாஜக அரசிடம் ஊழல் பணம் உள்ளது தெளிவாகி உள்ள்து. ஆகவே இந்த விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற அமைப்புக்கள் தலையிடுமா? அந்த அமைப்புக்கள் எடியூரப்பாவை சோதனை இட உள்ளனவா? அப்படி இல்லை எனில் இந்த விவகாரத்தின் பின்னே மோடி மற்றும் அமித்ஷா பங்கு உள்ளது என்பதை தெளிவாக தெரிந்துக் கொள்ள முடியும்.” என தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]