புதுடெல்லி:

மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக டெல்லியில்  நிதி ஆயோக் கூட்டம் நடந்தது.


சனிக்கிழமை பிற்பகல் கூடிய கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோர் புறக்கணித்தனர்.

மன்மோகன் சிங்

இதற்கிடையே, நிதி ஆயோக் கூட்டம் நடக்கும் முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 முதல்வர்களும், கர்நாடக முதல்வர் குமாரசாமியும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

விவசாயிகள், மலைவாழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் எழுப்ப வேண்டிய கேள்வி குறித்து மன்மோகன் சிங்குடன் முதல்வர்கள் ஆலோசித்தனர்.

முன்னாள் பிரதமருடனான சந்திப்பில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடக முதல்வர் குமாரசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சட்டீஸ்கர் முதல்வர் புபேஸ் பகேல் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, பகேல், குமாரசாமி மற்றும் நாராயணசாமி ஆகியோர் பிரதமர் மோடியை தனித் தனியாக சந்தித்தனர்.

முன்னதாக, வெள்ளியன்று காங்கிரஸ் முதல்வர்கள் கெலாட், பகேல் மற்றும் நாராயணசாமி ஆகியோருக்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தனது புதுடெல்லி இல்லத்தில் விருந்து அளித்தார்.

காங்கிரஸை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விருந்திலும் பங்கேற்வில்லை. நிதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.