சென்னை: காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் போக்கு என தமிழ்நாடு சட்டப்பேரவையின்  காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளதுடன், ரூ.210 கோடி அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்,  காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருப்பதற்கு செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக  செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாசிச பா.ஜ.க.வின் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் வருமான வரித்துறை காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருப்பதற்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் வருமானத்தை வாரி குவித்த பா.ஜ.க. விற்கு உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதம் என்று நேற்று (16.02.2024) வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கொடுத்ததிலிருந்து எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நோக்கில் பொதுமக்களிடம் திரள்நிதி சேர்த்த வங்கிக் கணக்குகள், இளைஞர் காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கியுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்றுப்போய்விடுவோம் என்று உறுதியாக தெரிந்ததால், இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது பாஜக.

இது ஆளும் பா.ஜ.க. அரசின் ஆணவ, அராஜகப்போக்கைக் காட்டுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஆளும் பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் போக்கை கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தக்க பதிலடி தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை .

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – ரூ.210 கோடி அபராதம்! அஜய் மக்கென் தகவல்…