டில்லி

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என காங்கிரஸ் வினா எழுப்பி உள்ளது.

சத்தீஸ்கரில் கடந்த வாரம் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் திட்டமான பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு அரசு நீட்டிக்கும் என்று அறிவித்தார்.

தற்போது ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

எக்ஸ் சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

“பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட நீட்டிப்பிற்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவே இல்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே பொதுவெளியில் மோடி அறிவித்து விட்டார்.

மோடி எப்படிச் செயல்படுவார் என்பதற்கு இது ஒரு உதாரணம். பாஜக அரசில் மத்திய அமைச்சரவைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. முதலில் மோடி அறிவித்து விடுவார். பிறகு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமீறலும் கூட.. எனவே தேர்தல் ஆணையம் இதைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா?”

என வினா எழுப்பியுள்ளார்.