டெல்லி
காங்கிரஸ் கட்சி இந்தியர்கள் நாடு கடத்தல் குறித்து டிரம்பிடம் கேட்க மோடிக்கு தைரியம் உள்ளதா என வினா எழுப்பி உள்ளது/
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில்,
“பிரதமர் மோடி தனது ‘நல்ல நண்பர்’ அதிபர் டிரம்ப்பை பிப்ரவரி 14-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு சந்திப்பார். அப்போது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் உறுதிப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா ஏற்கனவே சில விவசாய விளைபொருட்கள் மற்றும் டிரம்பிற்கு விருப்பமான ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைத்து அமெரிக்க அதிபரை சமாதானப்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அணுசக்தி சேதங்களுக்கான சிவில் பொறுப்பு சட்டம், 2010-ஐ திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமரிடம் ஐந்து கேள்விகள் உள்ளன;-
- சில நாட்களுக்கு முன்பு இந்திய குடிமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்க அதிபரிடம் கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா?
- எதிர்காலத்தில் நாடு கடத்தப்படும் இந்தியர்களை அழைத்து வர, வெனிசுலா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளைப் போல் இந்தியா தனது சொந்த விமானங்களை அனுப்பும் என்று பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் தெரிவிப்பாரா?
- பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்துவாரா? அமெரிக்க அதிபர் காசா விவகாரத்தில் முன்வைத்த வினோதமான திட்டத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவாரா?
- காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்தும் உலக சுகாதார அமைப்பில் இருந்தும் விலகுவது அமெரிக்காவின் தலைமைப் பதவியையும், அதன் பொறுப்பையும் கைவிடுவதாகும் என்று மோடி அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கூறுவாரா?
- H1B விசா வைத்திருப்பவர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் குறித்தும், அவர்களில் 70%க்கும் அதிகமானோர் இந்திய இளைஞர்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பிரதமர் மோடி அதிபர் டிரம்பிடம் தெளிவாகச் சொல்வாரா?
சந்தேகத்திற்கு இடமின்றி பிரதமர் மோடி, தொழிலதிபர் எலான் மஸ்க்கையும் சந்திப்பார். இது சம்பந்தமாக நமக்கு இரண்டு கேள்விகள் உள்ளன;-
- டெஸ்லா நிறுவனம் இந்தியாவை தனது மின்சார வாகனங்களுக்கான சந்தையாக கருதினால், இந்தியாவில் அதன் உற்பத்தி மையத்தை தொடங்க வேண்டும் என்று எலான் மஸ்க்கிடம் பிரதமர் மோடி தெளிவாக கூறுவாரா?
- மே 2014-ல் பிரதமரான பிறகு ஸ்பெக்ட்ரத்தை நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு செய்யாமல், ஏலம் விடும் கொள்கையை ஆதரித்த மோடி, மீண்டும் அதனை வலியுறுத்துவாரா? ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் இணைய சேவைதாரர்களை பொறுத்தவரை, பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதை பிரதமர் மோடி வலியுறுத்துவாரா?”
எனப் பதிவிட்டுள்ளார்.