தூத்துக்குடி வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

திருப்பூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிப். 27 மற்றும் 28 இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

பிப்ரவரி 28ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து இம்மாதம் 3ம் தேதி விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்கள் 23 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அதில் 20 பேரை விடுதலை செய்தனர்.

மீதமுள்ள மூன்று மீனவர்களில் இரண்டு பேருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் ஒருவருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கியுள்ளது இலங்கை நீதிமன்றம். மேலும் இவர்கள் சென்ற விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். மீனவர்களின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு சுஷ்மா சுவராஜ் தலைமையில் பாம்பனில் பா.ஜ.க.வினர் நடத்திய கடல் தாமரை மாநாட்டில் “பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம், தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது தடுக்கப்படும்” என்று உறுதியளித்தனர்.

ஆனால் பாஜக அரசு இதனை நிறைவேற்றவில்லை அதே வேளையில் மீனவர்கள் நலனில் அக்கறையும் காட்டவில்லை என்பதால் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு கருப்பு கோடி ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.