மும்பை:
காராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் மாநில கூட்டணி அரசு தடுமாறி வரும் நிலையில், தற்போது ஆட்சியிலும் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
சிவசேனா – தேசியவாத காங்கிரஸ்  இடையே உரசல் ஏற்பட்டுள்ளது உறுதியாகி இருப்பதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் உறுதி செய்துள்ளார்.

“ஒரு விஷயம் பற்றி நான் தெளிவாக வகைப்படுத்த விரும்புகிறேன். நாங்கள் மகாராஷ்டிர அரசை ஆதரிக்கிறோம். ஆனால், நாங்கள் அங்கு முடிவெடுக்கும் இடத்தில் இல்லை.என்று தெரிவித்து, மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சி தடுமாறுகிறது என்பதை ஊர்ஜிதப்படுத்தி உள்ளார்.
மகாராஷ்டிராவில், பாஜக, சிவசேனா இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், அதிகார மோகம் காரணமாக இரு தரப்புக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, பாஜக ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவானது.
இதன் காரணமாக சிவசேனா ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியது. அதனுடன் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி, பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி போன்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டு,கடந்த 6 மாதங்களாக ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ள மாநிலம்தான் மகாராஷ்டிராதான். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான மும்பையின் தாராவி உள்பட பல பகுதிகளில் வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அங்கு நோய் தொற்றை தடுக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.  இந்த நெருக்கடியால் சிக்கித்தவித்து வரும் தாக்கரே அரசுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சி குடைச்சல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக   தேசியவாத காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு வருவதும், பின்னர் சமாதானம் அடைவதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சரத் பவார், நேற்று  திடீரென முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினார்.
இது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அந்த பரபரப்பு முடிவடைவதற்குள், இன்று  மகாராஷ்டிரா மாநில ஆளுநரை சரத்பவார் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு மேலும் ரெக்கைக்கட்டி பறந்து வருகிறது.
ஆளுநர் உடனான சந்திப்பு குறித்து கூறிய பவார், மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றவர், உத்தவ்தாக்கரே அரசுக்கு  எந்த வித நெருக்கடியும் இல்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களுடன்தான் உள்ளனர் என்று தெரிவித்தார்.
பவாரின் பேச்சு, அரசியல் விமர்சகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் யாரும் பாஜகவின் கைகளில் சிக்கியுள்ளார்களோ என்று ஆராயத் தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையில், சிவசேனா, என்சிபி இடையே மோதல் என சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பரவி மற்றொரு புறம் அரசியல் புயலை உருவாக்கி வருகின்றன.
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில், ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் உத்தவ் தாக்கரே விரும்புவ தாகவும், ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சி அதற்கு முட்டுக்கட்டைப் போடுவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா விவகாரம் மற்றும் தளர்வுகள், மாநில பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களில் இரு கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள உரசல் நீடித்து வருவதாகவும்,  இதனால், உத்தவ் தாக்கரே நிம்மதியிழந்து காணப்படுவதாகவும் சிவசேனா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக டிவிட் பதிவிட்டுள்ள  சிவசேனா கட்சியைச் சேர்ந்த  சஞ்சய் ராவத் எம்.பி., “சரத் பவாரும் உத்தவ் தாக்கரேவும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.  இது வழக்கமான சந்திப்புதான். இதை  யாராவது மகாராஷ்டிர அரசு ஸ்திரமாக இல்லை என்று வதந்தி பரப்பினால் அது அவர்களின் வயிற்றெரிச்சலாகவே இருக்கும். என்று பதிவிட்டு, இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் இல்லை என்று உறுதிப்படுத்தினார்.
ஆனால், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்நாள் எம்.பி.யுமான ராகுல்காந்தி, மகாராஷ்டிரா மாநிலம் குறித்து தெரிவித்த கருத்து, அங்கு கூட்டணி கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. . நாங்கள் பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முடிவெடுக்கும் இடத்தில் உள்ளோம்.  ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் முடிவெடுக்கும் இடத்தில் இல்லை, மாநிலஅரசை ஆதரிக்க மட்டுமே செய்கிறோம்.  ஒரு அரசை நடத்துவதற்கும், ஆதரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.

ராகுலின் கருத்து மகாராஷ்டிரா மாநிலஅரசில் மேலும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,  அதுபோல, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான  சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே, “ராகுல்  சொன்னது சரிதான் என்று கூறியவர்,. நாங்கள் கூட்டணியில் உள்ளோம். இங்கு அனைவரும் கலந்துதான் ஒரு முடிவை எடுக்கிறோம். அனைத்துக் கட்சிகளுக்கும் கூட்டணியில் சம உரிமை உள்ளது,” என்று தெரிவித்து உள்ளார்.
மகாராஷ்டிரா கூட்டணி அரசில் ஏற்பட்டுள்ள சலசலப்பு அரசியல் மட்டத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மாநில பாஜகவோ,  கூட்டணி கட்சிகளுக்குள் எழுந்துள்ள பிரச்சினையை, தங்களுக்கு சாதகமாக்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
ஆட்சியை கவிழ்க்க, மாற்றுக்கட்சி எம்எல்ஏக்களுக்கு தூண்டில் போட முயற்சி மேற்கொண்டு வருவதாகவும்  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.