சென்னை:
வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமின் பெற்றிருந்த, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமின் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று காலையிலேயே  நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதைத்தொடர்ந்து, நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி மீது புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து, வன்கொடுமை  உள்பட பல சட்டப்பிரிவுகளில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மே மாதம்  23-ம் தேதி வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில்  ஆர்.எஸ் பாரதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.  அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உடனே   மே 31ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியது.

ஆர்.எஸ்.பாரதியின்  இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிந்த நிலையில், வழக்கமான ஜாமீன் பெற நீதிமன்றத்தில் சரணடைந்தார் ஆர்.எஸ்.பாரதி.
இன்று ஆர்.எஸ்.பாரதியின் ஜாமின் மனு  சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இதுதொடர்பான வாதங்கள் முற்பகலில் முடிவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.
இதையடுத்து, ஆர்.எஸ்.பாரதிக்கு இன்று மாலை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.