கேள்விகள்: ரவுண்ட்ஸ் பாய் பதில்கள்: ராமண்ணா

 

ராமண்ணாவை ஆச்சரியப்படுத்தும் விசயம் எது?

நிறைய உண்டு என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே. இப்போதைக்கு (மேலும்) ஒன்று சொல்கிறேன்.

சாதியற்ற தலைவர்கள் என்று சொல்பவர்களின்  தொண்டர்கள்  பெரும்பாலோர் சாதி வெறியர்களாக இருக்கிறார்கள்.

கருணை கொண்ட கடவுள்கள் என்று சொல்லப்படுபவைகளின் பக்தர்கள்  பெரும்பாலோர் மத வெறியர்களாக இருக்கிறார்கள்.

 

கருணாநிதி குறித்து தி இந்து வெளியிட்டுள்ள “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” படித்துவிட்டீர்களா?

தி.மு.க. தலைவர் கருணாநிதிதான் முந்தைய பிறவியில் ராஜராஜசோழனாக பிறந்திருந்தார் என்று வைத்தீஸ்வரன் கோயிலில் புகழ் பெற்றிருந்த நாடி ஜோதிடர் ஒருவர் சொல்லியிருந்தார்.

அப்போது அது பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

தி இந்து நாளிதழ் கருணாநிதி குறித்து வெளியிட்ட புத்தகத்தில் இந்த தகவலை சேர்க்க மறந்து விட்டார்கள். அடுத்த பதிப்பிலாவது சேர்க்க வேண்டும்.

படித்தபிறகு தோன்றியது இதுதான்.

பயங்கரவாதம் வேறு, தீவிரவாதம் வேறு என்று கமல் பேசியிருக்கறாரே..

 எதுவேண்டுமானாலும் பேசட்டும். அவரது ட்விட் போலவே, அவரது பத்திரிகை எழுத்துக்கும், பொழிப்புரை தேவைப்படுகிறது.   நல்ல முன்னேற்றம்தான்.

 

 

கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டிருக்கிறாரே..

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (கந்துவட்டி கொடுமையால்) தீக்குளித்த குடும்பத்தினர் குறித்து பாலா ஒரு கார்டூன் வரைந்தார்.  அதில் ஆட்சியர், காவல்துறை ஆணையர், தமிழக முதல்வர் ஆகியோரை நிர்வாணமாக (99% ?) சித்தரித்திருக்கிறார். இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் புகார் அளித்ததை அடுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

“இன்று காலை, கார்டூனிஸ்ட் பாலாவின் வீட்டுக்குள் கும்பலாக புகுந்து குடும்பத்தினரை பயமுறுத்தி கைது செய்திருக்கிறது காவல்துறை. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை” என்கிறார்கள்.

தவிர நெல்லையில் பெறப்பட்ட புகாருக்கு அம்மாவட்ட காவல்துறையினர் சென்னை வந்து பாலாவை கைது செய்திருக்கிறார்கள். இதுபோன்ற சமயங்களில் உள்ளூர் (சென்னை மாவட்ட) காவல்துறையினரை தொடர்புகொண்டு அவர்களது உதவியுடன் கைது செய்ய வேண்டும். இதில் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. ஆக இதுவும் சட்டத்துக்குப் புறம்பான செயலே.

காவல்துறையின் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பாட்டுக்கு கண்டனங்கள். இப்படி செயல்பட்ட காவலர்கள், அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே நேரம் பாலாவின் அந்த கார்டூனும்  ஏற்கத்தக்கது அல்ல.

கந்துவட்டியால் குடும்பமே தீக்குளித்த்து, அரசு எந்திரம் பாராமுகமாக இருந்த்து ஆகியவை கண்டிக்கவேண்டிய.. ஏன் தண்டிக்க வேண்டிய குற்றமே.

அதற்காக நிர்வாணமாக (99%) வரைவது அருவெறுப்பானது.

“தவறு செய்தவர்களைத்தானே நிர்வாணமாக வரைந்தார்” என்பவர்கள், தங்களது தவறுகள் குறித்து கேள்வி கேட்டுக்கொள்ளட்டும்.

அவர்களை நிர்வாணமாக கார்டூன் வரைந்தால் அவர்களது மற்றும் அவர்களது குடும்பத்தினர் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் சிந்திக்கட்டும்.

தவிர..  நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாநகர காவல்துறை ஆணையர்,, தமிழக முதல்வர் ஆகியோர் ஆண்களாக அமைந்துவிட்டார்கள். இதுவே பெண்களாக இருந்தால்?

மேலும்.. தவறு செய்பவர்கள் மீது ஆத்திரம் என்றால் அவர்களை நிர்வாணமாக்கித்தான் மனதை திருப்திப்படுத்திக்கொள்ள அல்லது ஆத்திரத்தைப் போக்கிக்கொள்ள முடியுமா.

டிரான்ஸ்லேட்டில் தமிழ் தட்டச்ச முடிகிறது என்பதால் எதை வேண்டுமானாலும் எழுதுவோர் பலர். அதுபோல வரைய வருகிறது என்பதால் கார்டூன் என்ற பெயரில் எதையும் வரையலாம் என்பதும் ஏற்கத்தக்கது அல்ல.

இப்படி எழுதுவதும், வரைவதும் அவரவர் மனநிலையையே வெளிப்படுத்துகிறது.

பாலாவின் கைது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கடந்து எனது இந்த எண்ணத்தையும் பதிய விரும்புகிறேன்.

திறமையான ஓவியரான பாலா, இந்த கைது நடவடிக்கையில் இருந்து மீளவும், நல்லதொரு கார்டூனிஸ்டாக மலரவும் வாழ்த்துகள்.

@ குறிப்பு : பாலா உட்பட எவர் மீதும் எனக்கு விருப்பு வெறுப்பு கிடையாது. பாலாவின் கட்டுரை ஒன்று சிறப்பாக இருந்தது என்று பாராட்டியிருக்கிறேன். அவரது சில கார்டூன்களையும்  மிகரசித்திருக்கிறேன். ஆகவே,  “பாலாவுக்கும் ராமண்ணாவுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு” என்று யாரும் சொல்ல வேண்டாம்.

 

 சென்னையில் வெள்ளம்?

ஏரியை ஏரியா ஆக்கினா, ஏரியா ஏரி ஆகத்தான் செய்யும்.