புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் உள்ள பல பயிற்சி மையங்கள், மிகவும் ஆபத்தான மற்றும் மோசமான சூழலில் அமைந்துள்ளதால், மாணாக்கர்களின் உயிருக்கு எந்நேரமும் தீங்கு நேரலாம் என்ற நிலையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தலைக்கு மேலே ஊசலாடும் மின்சார கம்பிகள், தீ தடுப்பு இல்லாத சமையலறைகள் மற்றும் ஹோட்டல்கள், சரியான முறையில் அமைந்திராத நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் வழி, தீ தடுப்புக் கருவிகள் இல்லாமை, தீ அணைப்பு வாகனங்கள் வந்து செல்வதற்கான போதிய இடமற்ற சாலையில் அமைந்திருப்பது உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் மற்றும் ஆபத்துகள் மத்தியில் அமைந்துள்ளன அந்த பயிற்சி மையங்கள்.
இத்தகைய ஆபத்துகள் மற்றும் அவல நிலையில் அமைந்த பயிற்சி மையங்களில்தான், ஆண்டிற்கு ரூ.3 லட்சம் வரை செலவழித்து, தங்களுடைய பிள்ளைகளை பயிற்சிபெற வைக்கிறார்கள் பெற்றோர்கள்.
குஜராத்தின் சூரத் நகரில் செயல்பட்ட இத்தகைய ஒரு சட்டவிரோத பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அநியாயமாக 20 மாணாக்கர்கள் இறந்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
கிழக்கு டெல்லியில் அமைந்த லஷ்மி நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பார்த்தால், சட்டவிரோதமான முறையில் அமைந்த பல நூற்றுக்கணக்கான பயிற்சி மையங்களின் பலகைகள், மாணாக்கர்களின் சிரித்த முகத்துடன் பளிச்சென்று தெரியும்.