சென்னை: ரோபா உதவியுடன் முழுமையான முறையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, சென்னை மருத்துவமனை ஒன்றில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை ஜிஇஎம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 36 வயதுடைய ஒரு பெண் நோயாளிக்கு, இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, அவரின் கணவரே தனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார்.
ரோபோ தொழில்நுட்பம் மூலமாக மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை வலியில்லாத ஒன்று என்றும், இதன்மூலம் சிறுநீரகம் பெற்றவரும், தானம் அளித்தவரும் விரைவிலேயே குணமடைந்து வருவதாகவும், வழக்கமான அறுவை சிகிச்சை நடைமுறையோடு ஒப்பிடுகையில் இது சிறந்த ஒன்று எனவும் மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதனால் நோயாளிக்கு குடலிறக்கம் ஏற்படும் வாய்ப்பு குறைவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.