புதுடெல்லி: டெல்லியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகளின் மரணம் மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்து வருவதாக புகார்கள் கிளம்பியுள்ளன.
டெல்லி உயிரியல் பூங்கா என்பது அதிகாரப்பூர்வமாக தேசிய உயிரியல் பூங்கா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

டெல்லியின் பழைய கோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தப் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

கடந்த 2017-2018 காலகட்டத்தில் மட்டும், ஒரு நாளைக்கு தோராயமாக 7,422 பேர் இந்தப் பூங்காவிற்கு வருகை தந்தனர். அந்தவகையில், ரூ.12.19 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

நாட்டிலேயே இந்த உயிரியல் பூங்கா மட்டுமே, மத்திய சுற்றுச்சூழல், வனம் & பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளின் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பூங்காவிற்கு வரும் கூட்டம் மற்றும் இதுகுறித்து டிராவல் வலைதளங்கள் உள்ளிட்டவைகளில் பெரிதாக செய்யப்படும் விளம்பரம் போன்றவை ஒரு பக்கம் இருந்தாலும், இங்கே நடக்கும் ஊழல் முறைகேடுகள், விலங்குகளின் மரணங்கள், கடத்தல்கள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் போன்றவை கவலை தருவதாக உள்ளன.

இதுதொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றம், சமீபத்தில் ஒரு ஆய்வுக்கும் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பூங்காவில் சட்டவிதிகளோ அல்லது ஒழுங்குமுறைகளோ சுத்தமாக கடைபிடிக்கப்படுவதில்லை என்றே தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.