மாண்டியா
இன்று தமிழகத்துக்குக் காவிரி நீர் திறப்பதை எதிர்த்து மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம் நடை பெறுகிறது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் மண்டியா மட்டுமின்றி மைசூரு, சாம்ராஜ்நகர், ராமநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க எதிர்க்கட்சிகளான பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தற்போது கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்பினர், எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்குக் காவிரி நீா் திறப்பதைக் கண்டித்து மண்டியா நகரில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
நேற்று மண்டியாவில்இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டியா மாவட்ட விவசாய நலச்சங்கம் உள்பட பல்வேறு விவசாய அமைப்பு மற்றும் கன்னட அமைப்பினர் கலந்து கொண்டனர். மாண்டியாவில் இன்று நடக்க உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய அமைப்பு மற்றும் கன்னட அமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சிகளான பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
மாண்டியாவில் இந்த முழு அடைப்புக்குத் தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் ஆதரவு அளித்து கடைகளை மூட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டத்தின்போது சட்டத்தைக் கையில் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அமைச்சர் பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த முழு அடைப்பையொட்டி மாண்டியாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.