சென்னை
தமிழகத்தில் உள்ள ஸ்கிரிப்சர் யூனியன் என்னும் கிறித்துவ மத நிறுவன போதகர் சிறுமிகளிடம் தகாத முறையில் இணையத்தில் உரையாடியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிறித்துவ மத நிறுவனமான ஸ்கிரிப்சர் யூனியன் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கிறித்துவ வேதமான பைபிள் வகுப்புக்கள் நடத்தி வந்தது. இந்த வகுப்புக்கள் கிறித்துவ தேவாலயங்கள் நடத்தும் பள்ளிகளில் விடுமுறை நேரத்தில் நடப்பது வழக்கமாகும். இந்த பணிக்காகப் பல மத போதகர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் சாமுவேல் ஜெய்சுந்தர் என்பவரும் ஒருவர் ஆவார். இவர் இந்நிறுவனத்தின் ஆங்கில பதிப்புக்கள் பிரிவில் செயலராகப் பணி புரிந்து வந்தார். இவர் தனது குழுவினருடன் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் விடுமுறைக்கால பைபிள் வகுப்புக்களை நடத்தி வந்துள்ளார். அப்போது இவர் 10 முதல் 15 வயதுள்ள சிறுமிகளிடம் இணையம் மூலம் தகாத முறையில் உரையாடியதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த புகார்களை முன்பு மாணவிகளாக இருந்த பெண்கள் ஸ்கிரின் ஷாட்டுடன் வெளியிட்டுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இவரிடம் பயின்ற மாணவி, “நான் பள்ளி சீருடையில் அழகாக உள்ளதாக சாமுவேல் சொல்வார். அத்துடன் சாதாரண உடையில் எனது புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டர். அவர் என்னிடம் செல்லம், தங்கம் என அழைப்பார். நான் அதை சட்டை செய்யவில்லை எனினும் அவர் என்னைப் பைபிள் முகாமுக்கு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
அவருடன் மூன்று நாட்கள் தங்க வேண்டும் என்பதால் நான் அதை மறுத்தேன். அதனால் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டு முகவரியை அனுப்பி அங்கு வந்து தம்மைத் தனிமையில் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார் . அத்துடன் அவர் நான் அழகாக இருப்பதால் கட்டி அணைத்து கொஞ்ச வேண்டும் எனத் தெரிவித்துப் பல தவறான முறையில் சாட் செய்துள்ளார். அதன் பிறகு எது நண்பர்களில் ஒருவன் அவரை மிரட்டிய பிறகு தொல்லை தரவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் ஒரு மாணவி, தமக்கு 14 வயதாக இருக்கும் போது சாமுவேல் தன்னிடம் முகநூல் தகவலில் தமது உடைகளைப் புகழ்ந்ததாகவும், தாம் குட்டைப்பாவாடையில் அழகாக உள்ளதாகவும் கூறியதாகத் தெரிவித்துள்ளார். அப்போது அது குறித்து அப்போது தவறாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் ஆனால் சமீபத்தில் மீண்டும் அதைப்போல் உரையாடியதால் நான் சற்றே சந்தேகம் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைப் போல் மேலும் சில பெண்கள் ஸ்கிரீன் ஷாட்டுடன் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஸ்க்ரிப்சர் யூனியன் சாமுவேலை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அவர் மீது ஓரிரு நாட்களில் விசாரணை நடத்த உள்ளது. இந்த நிறுவனத்துக்கு என விசாரணைக்குழு இல்லாததால் வெளியில் இருந்து ஒரு அதிகாரி மற்றும் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் குழுச் செயலர் மற்றும் பள்ளி முதல்வர் ஒருவரும் விசாரணை நடத்த உள்ளனர்.