திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் ஆலயத்திற்கு அருகில் புறம்போக்கு நிலத்தில் உள்ள கடை தொடர்பாக உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் வாடகைதாரர் தரப்பைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி மீது தாக்குதல் நடத்தியதாக கூறி ராணுவ வீரர் பிரபாகரன் ஜம்முவில் இருந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு-வுக்கு வீடியோ மூலம் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனையடுத்து ராணுவ வீரரின் குடும்பத்துக்கே கதியா என்று அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர்.
தவிர, ராணுவ வீரருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தவும் முடிவெடுத்தனர்.
ராணுவ வீரர் வெளியிட்ட வீடியோவில், தனது மனைவி தாக்கப்பட்டதுடன் மானபங்கப்படுத்தப் பட்டதாகவும் தாக்குதலில் அவரது காது, மூக்கில் ரத்தம் வருகிறது என்றும் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் படவேட்டில் உள்ள தனது உறவினருடன் பேசிய ராணுவ வீரர் பிரபாகரன், “தனது மனைவி தாக்கப்பட்டது குறித்து மிகைப்படுத்தி கூறுவேண்டும்” என்று அவரிடம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையிலான வருவாய் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் “நீர் நிலை புறம்போக்கு பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடையை ராணுவ வீரரின் மாமனார் செல்வமூர்த்தியிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9.50 லட்சம் பெற்றுக்கொண்டு குன்னத்தூர் கிராமத்தில் வசித்த குமார் என்பவர் மாதம் ரூ. 3,000 வாடகைக்கு விட்டுள்ளார்.
குமார் இறந்துவிட்டதால், அவரது மகன் ராமு, கடையை ஒப்படைக்கக்கோரி செல்வமூர்த்தியை வலியுறுத்தியுள்ளார். ஆனால் செல்வமூர்த்தி கடையை காலி செய்ய மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் ராணுவ வீரரின் மைத்துனர்கள் ஜீவா, உதயா ஆகியோர் ராமுவை கத்தியால் வெட்டினர். அப்போது ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி அங்கு இருந்துள்ளார்.
ராமுவுக்கு ஆதரவாக செயல்பட்ட சிலர் ராணுவ வீரரின் மனைவி நடத்திவரும் கடையில் இருந்த பொருட்களை உடைத்துள்ளனர்.
ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியையோ, அவரது தாயாரையோ தாக்கி யாரும் மானபங்கம் செய்யவில்லை. இது மிகைப்படுத்தி கூறிய தகவல் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, ராமு கொடுத்த புகாரின் பேரில் ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி, அவரது சகோதரர்கள் ஜீவா, உதயா உள்ளிட்டோர் மீதும் மற்றும் கீர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ராமு, ஹரிகரன், செல்வராஜ், அவரது மனைவி ஜெயகோபி, மதி உள்ளிட்ட 8 பேர் மீதும் காவல் துறையினர் தனித்தனியே வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தனது மனைவி மானபங்கப்படுத்தப் பட்டதாக மிகைப்படுத்திக் கூறவும் பெண்ணை மானபங்க படுத்தியதால் கத்தியால் வெட்டினோம் என்று கூறும்படியும் ராணுவ வீரர் பிரபாகரன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.