பாட்னா
நிதீஷ்குமாரின் தற்போதைய அமைச்சரவையில் முந்தைய கூட்டணி அமைச்சரவையில் இருந்ததை விட அதிகம் குற்றப் பின்னணி உள்ள அமைச்சர்கள் (3/4வாசி பேர்) இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்னும் அமைப்பு சமீபத்தில் பதவி ஏற்ற நிதீஷ்குமார் அமைச்சரவை பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தற்போதுள்ள அமைச்சரவையில் முந்தைய அமச்சரவையை விட அதிகமாக குற்றப் பின்னணி உள்ளவர்கள் இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி முந்தைய அமைச்சரவையில் இருந்த 28 அமைச்சர்களில் 19 பேர் மேல் கிரிமினல் வழக்குகள் இருந்தன. ஆனால் தற்போதைய அமைச்சரவையில் 29 அமைச்சர்களில் 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த ஆய்வு அமைச்சர்கள் தங்களின் வேட்பு மனுவில் கொடுத்திருந்த விவரங்களைக் கொண்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த 22 பேரில் 9 பேர் கிரிமினல் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களில் ஒன்பது பேர் தங்களி கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை என குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் 18 பேர் பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வித் தகுதி உள்ளவர்கள். முன்பு இரண்டு பெண் அமைச்சர்கள் இருந்த நிலையில் தற்போது ஒரே ஒரு பெண் அமைச்சர் மட்டுமே உள்ளார். அதே நேரத்தில் அமைச்சரவையில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மொத்தமுள்ள 29 அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 2.46 கோடிகள் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.