சென்னை: கம்யூனிஸ்டு  கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98வது பிறந்த நாளையொட்டி,  முதலமைச்சர் ஸ்டாலின், அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசின் தகைசால் விருது பெற்றவருமான நல்லகண்ணுவின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது வீட்டுக்கு  நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சிறந்த அரசியல் சிற்பியுமான நல்லகண்ணு அவர்களுக்கு இன்று 98வது பிறந்த நாள். அவருடைய பிறந்த நாள் நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று அவரை வாழ்த்துகிற நேரத்தில், அவருக்கு என்னுடைய வணக்கத்தையும் தெரிவித்து நிகழ்ச்சியி்ல் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்.

தமிழக அரசு சார்பில் “தகைசால் தமிழர்” விருது ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய தலைவர் பெருமக்களை தேர்ந்தெடுத்து வழங்குவது என்று முடிவெடுத்து, முதலாண்டு மாக்சிஸ்ட் இயக்கத்தினுடைய மூத்த தலைவர் சங்கரையாவுக்கு வழங்கி பெருமை படுத்தினோம்.

அதனைத் தொடர்ந்து 2வது ஆண்டு நம்முடைய நல்லகண்ணு அவர்களுக்கு வழங்கி பெருமை படுத்தி உள்ளோம். என்னை பொறுத்தவரையில், இவர்களுக்கு விருது வழங்கியதால் அந்த தகைசால் தமிழர் விருதுக்கு பெருமை கிடைத்துள்ளது.

இந்த 98 வயதிலும் அவர் தன்னுடைய கொள்கையிலிருந்து என்றைக்கும் மாறாமல் கொள்கைக்கு இலக்கணமாக தனது பணியை செய்து கொண்டு இருக்கிறார். பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு நாம் எடுத்திருக்கக்கூடிய முயற்சிக்கு வழிகாட்டியாக நல்லகண்ணு விளங்கிக் கொண்டிருக்கிறார் என்றார்.