சென்னை:
சமீபத்தில் ஆஸ்திரேலியா கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்று பதங்கள் குவித்த தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகையாக ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 17ந்தேதி காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்த நிலையில், இன்று அவர்களை சென்னை தலைமை செயலகத்துக்கு வரவைழைத்து பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் போட்டியில், வேலூரை சேர்ந்த சதிஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்றார். அவருக்கு ரூ.50 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
டேபிள்டென்னிஸ் தங்கம் வென்ற சரத்கமல், அமல்ராஜ், சத்யன் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாயை முதலமைச்சர் வழங்கி பாராட்டினார்.
அதுபோல, ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சவுரவ் கோஷல், மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் தலா 30 லட்சம் ரூபாய் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற தீபிகா தினேஷ்கார்த்திக் 60 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை பெற்றார்.
இத்துடன் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.