கோல்டுகோஸ்ட்:

71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்டில் நாளை கோலாகலமாக  தொடங்குகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் காமன்வெல்த் போட்டி தற்போது 21வது போட்டியாக நடைபெறுகிறது., இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்டில் நாளை தொடங்குகிறது.

நாளை  (4ந்தேதி) தொடங்கி முதல் 15-ந் தேதி  வரை பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்  19 விளையாட்டுகளில் இருந்து 275  போட்டிகள்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,  ஆஸ்திரேலியா, இந்தியா,  இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஜமைக்கா, நைஜீரியா, கனடா, ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, மலேசியா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

17-வது முறையாக காமன்வெல்த் போட்டியில் களம் இறங்கும் இந்தியா இதுவரை நடைபெற்ற போட்டிகளின் வாயிலாக, 155 தங்கம் உள்பட 438 பதக்கங்கள் வென்று 4-வது இடத்தில் உள்ளது.

கடந்த  2002-ம் ஆண்டில் 69 பதக்கமும், 2006-ம் ஆண்டில் 50 பதக்கமும், 2010-ம் ஆண்டில் (டில்லி) அதிகபட்சமாக 101 பதக்கமும், 2014-ம் ஆண்டில் (கிளாஸ்கோ) 64 பதக்கமும் இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.

நாளை தொடங்க உள்ள காமன்வெல்த் போட்டியில், இந்திய அணி சார்பாக  219 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

14 விளையாட்டுகளில் களமிறங்கும்  இந்திய அணியினர் வழக்கம் போல் துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகியவற்றில் அதிக பதக்கங்களை வெல்லுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல,  இறகுப்பந்தில் (பேட்மிண்டன்) சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் ஆசிய போட்டியில் சாதனை படைத்த நீரஜ் சோப்ரா ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு இறகுப்பந்து வீராங்கனை பி.வி.சிந்து தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி செல்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு ஆக்கி வீரர் மார்க் நோலஸ் தலைமை தாங்கி கொடியேந்தி அணிவகுக்க இருக்கிறார். தினசரி போட்டிகள் இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்த போட்டியை சோனி சிக்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிக்கு அடுத்தபடியாக காமன்வெத் போட்டி, உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு போட்டியாக கருதப்படுகிறது.