சென்னை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய அளவிலான வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக வருவாய் கிராமங்கள் உருவாக்க மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்க வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், பரப்பளவு மற்றும் மக்கள்தொகையில் அதிகம் உள்ள பெரிய வருவாய் கிராமங்களை இரண்டாக பிரித்து, ஒரு புதிய கிராம நிர்வாக அலுவலரை நியமிப்பது தொடர்பாக, 1980 டிசம்பர் 1ல் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில், வருவாய் கிராமங்களை இரண்டாக பிரித்தல் தொடர்பான முன்மொழிவுகள், அரசுக்கு அனுப்பப்படுகின்றன.
தற்போது, புதிய வருவாய் கிராமங்கள் பிரித்தல் மற்றும் உருவாக்குதல் தொடர்பாக, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து அதிக கோரிக்கைகள் வந்துள்ளன. இவற்றை பரிசீலித்து பரிந்துரை செய்ய, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், கோட்டாட்சியர், நில அளவை உதவி இயக்குனர், ஊராட்சி உதவி இயக்குனர் அல்லது நகராட்சி, மாநகராட்சி கமிஷனர், புள்ளியியல் உதவி இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க வேண்டும்.
இக்குழு, கிராமங்கள் மறு சீரமைப்பு தொடர்பான கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். பின், கலெக்டர்களுக்கு தங்கள் பரிந்துரையை அனுப்ப வேண்டும். கலெக்டர் உரிய பரிசீலனை செய்து, முன்மொழிவை அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.