சென்னை,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்  விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ன் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்து, பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தரப்பினரிடமிருந்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

இதேபோல, ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன என்றும் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டினார்.

எனவே ஜெயலலிதாவின் சிறப்புகளையும் நாட்டிற்கு செய்த சாதனைகளையும் தியாகங்களையும் பொதுமக்கள் அறியும் வண்ணம், அவர் வாழ்ந்த, சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள வேதா நிலையம் இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

எடப்பாடியின் அறிவிப்பு அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.