டெல்லி: உலக நாடுகளை புதிய வீரியம் மிக்க ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் எதிரொலியாக, வரும் 15 முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவையை மத்தியஅரசு  ஒத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவி வரும் ஒமிக்காரன் என்று வீரியமிக்க கொரோனா வைரஸ், உலகின் 18 நாடுகளில் பரவி உள்ளது. அதிவேகமாக பரவும் இந்த வைரஸ் இந்தியாவில் இதுவர ஊடுருவாத நிலையில், கண்காணிப்புகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக, வரும்  டிசம்பர் 15 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை தொடங்கப்படாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ” திட்டமிடப்பட்ட வணிக சர்வதேச பயணிகள் விமான சேவைகளை இந்தியாவிற்கு / இந்தியாவிலிருந்து மீண்டும் தொடங்கும் தேதியில் அதன் முடிவை சரியான நேரத்தில் அறிவிக்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. புதிய கோவிட் மாறுபாட்டின் தோற்றத்தைக் கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அது கூறுகிறது.” என்று தெரிவித்துள்ளது.