சென்னை

ரும் புதன்கிழமை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குக் காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராகச் செயல்பட்டார். இவர் அப்போது ஓட்டுநர், நடத்துநர் வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

கடந்த 13ஆம் தேதி நள்ளிரவில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி தமது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.

அமலாக்கத் துறை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி கோரியிருந்தது., கடந்த 16-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதி வரை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு வெளியிட்டார்.

அமைச்சருக்கு, இருதயத்தில் செல்லக் கூடிய 3 ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு வருகிற புதன்கிழமை (21-ந்தேதி) பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்து உள்ளனர்.