நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு..
ஜிஞ்ஜக்கு ஜக்கான்.. சக்கான்.. செதறவிட்ட தேங்காய்..
இந்த படத்தில் நீங்கள் கதாநாயகனாக நடிக்கிறீர்களா என்று ரஜினியிடம் கேட்டதற்கு, அவர் நோ நோ. எனக்கு அந்த பிளாக் மெயில் போட்டோ கிராஃபர் ரோல்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி அப்படியேயும் நடித்தார் பாலு ஜேனு என்ற கன்னட படத்தில்.
காரணம் அந்த வேடத்தை தமிழில் மூலப்படமான மயங்குறாள் ஒரு மாது படத்தில் தேங்காய் சீனுவாசன் அவ்வளவு பவர்புல்லாக செய்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றதுதான்..
நகைச்சுவை நடிகரான அவர் சமயம் கிடைத்தபோது வில்லன் வேடங்களிலும் வெளுத்துவாங்கினார்.. தர்மயுத்தம், தாய்வீடு என பல படங்களை சொல்லலாம்., குணச்சித்திர பாத்திரங்கள் என்றாலும் அதிலும் துவம்சம்தான்..
நாகேஷிடமும் தேங்காயிடம் இரண்டு ஒற்றுமைகள் உண்டு. இருவருமே ரயில்வேதுறையில் வேலைபார்த்த்துவிட்டு நாடகங்கள் வழியாக திரைக்கு வந்தவர்கள்.
இரண்டாவது எம்ஜிஆர், சிவாஜி என்ற இருபெரும் திலகங்களின் செல்லப்பிள்ளைகளாக திகழ்ந்து அற்புதமாக இரட்டை சவாரி செய்தவர்கள்…
பலமான பாத்திரங்களை தேங்காய்க்கு வழங்கச் சொல்லி தங்களுக்கான புகழாரங்களை சூட்டச்செய்து இரு திலகங்களு தங்களை பலப்படுத்திக் கொண்டனர்.
அதிலும் எம்ஜிஆர் படு கில்லாடி. தேங்காயை வைத்து திரைப்படங்கள் மூலம் தனது அரசியல் எதிரிகளை விமர்சிப்பதில் இன் சரி தன் புகழ்பாட செய்வதிலும் சரி கன கச்சிதமாக காரியத்தை சாதித்துக்கொண்டவர்.
ரிக்சாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி போன்ற படங்களில் எம்ஜிஆரை தூக்கிப்பேசி அரசியல் எதிரிகளை தேங்காய் நக்கலடிக்கும் விதம் ஒவ்வொன்றும் சிக்ஸர்களாகவே. இருக்கும்..
படத்தில் அவர் வாயிலிருந்து வித்தியாச வித்தியாசமான கலப்பு வார்த்தைகளை அலசிப்பார்க்க தனி மூளையே தேவைப்படும்..
 ஜிஞ்சக்கு ஜக்கான்……..சக்கான் என்பார்.
ரஜினியின் பிரியா படத்தில் சினிமா தயாரிப்பாளர் வேடத்தில் அவர் சொல்லும் இந்த வார்த்தைகள் படத்தில் பார்த்தால் மட்டுமே அருமை பெருமை தெரியவரும்..
”என்னடா இங்கிலீசு பேசறேன்னு கேக்கறீயா.. எஜுகேட்டட் ரவுடிடா நான்” என்று சொல்லும் ஒரு விரல் (1965) படம்தான் தேங்காய் சீனுவாசனின் முதல் படம்.. ஆனால் இதற்கு முன்பே ஜெய்சங்கர் அறிமுகமான இரவும் பகலும் படத்தில் வாய்ப்பு கிடைத்தும் அது நழுவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த சீனிவாசனுக்கு தேங்காய் என அடைமொழியை சூட்டியது நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்க வேலு.. கல்மனம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக சீனிவாசன் கலக்கியதை கண்ட தங்கவேலு, இனி மேல் இப்படித்தான் அழைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.
எம்ஜிஆர், சிவாஜி உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் ஜெய்சங்கருடன்தான் அதிக படங்களில் நடித்தார் தேங்காய். இருவருக்கும் இடையிலான நட்பு அப்படி உயர்வாக இருந்தது.
இதேபோல எழுபதுகள் முழுவதும் தேங்காய்-மனோரமா ஜோடிதான் தமிழ்சினிமா நகைச்சுவை உலகை ஆட்டிப்படைத்தது.. இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவை பாடல் காட்சிகளும் படு ஹிட்டாகின.
1972-ல் காசேதான் கடவுளடா படத்தில் அவர் கலக்கிய போலிச்சாமி வேடம்.. என்றைக்கும் மறக்கமுடியாது. அதனால்தான் கதாநாயகன் முத்துராமனை விட்டுவிட்டு தேங்காயின் போலிசாமிக்கு பிரமாண்டமான கட்அவுட் டை வைத்தது ஏவிஎம் நிறுவனம் நகைச்சுவையையும் தாண்டி, தேங்காய் வெளுத்த பாத்திரங்கள் பலவுண்டு. வேதாந்தி நிலைக்கு தள்ளப்படும் கலியுக கண்ணன், கள்ளச்சாவி போடும் கில்லாடியாக பில்லா, என,51 வயதிலேயே (1988) இறக்கும் முன் அவர் அசத்திய படங்கள் ஏராளம்…
தில்லுமுல்லு படத்தில் அனைவருக்கும வசன உச்சரிப்பை சொல்லிக்கொடுத்த இயக்குநர் பாலச்சந்தர். தேங்காயை மட்டும் கட்டுப்படுத்த விரும்பாமல் அவர் போக்கிலேயே விட்டுவிட்டார். உங்களுக்கு என்னென்ன தோன்றுகிறதோ அதன்படியே செய்துவிட்டுப்போங்கள் என்றார்.
விளைவு? தில்லுமுல்லு படத்தில் ஹீரோ ரஜினி இரண்டாம் இடத்திற்கு போய் தேங்காய் சீனுவாசன் என்ற காமெடி காட்டாறு, முதலிடத்தை பிடித்து வெள்ளமாக பாய்ந்தது.
தேங்காய் சீனுவாசன் இன்று உயிரோடு இருந்திருந்தால் 84- வது பிறந்தநாள் கேக் வெட்டியிருப்பார்..