சென்னை:
மாணவர்களின் கைகளில் கலர் கலரான கயிறுகள் கட்டப்பட்டுள்ளதை அகற்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்ட நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் கண்டிப்பதை தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் ஏற்கனவே பிறப்பித்த கயிறுகட்டுவதை அகற்றும் உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அறிவித்து உள்ளார்.

பல மாணவர்களின் கைகளில் வண்ணக் கயிறுகள் கட்டப்பட்டுள்ளதை பார்க்கலாம். இதை பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் விரும்பும் தெய்வங்களை வேண்டி கருப்பு, சிவப்பு, மஞ்சள், பிரவுன், நீலம் என பல்வேறு கலர்களில், தங்களது குழந்தைகளுக்கு கட்டி வருகின்றனர். இதை சிலர், சாதிய அடையாளமாக பேசி, பிரச்சினை ஏற்படுத்திய நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது கைகளில் வண்ணக்கயிறு கட்டிவர தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தரப்பில் இருந்து சுற்றறிக்கை வெளியானது.
இது பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், திமுக எம்.பி. கனிமொழி வரவேற்பு தெரிவித்திருந்தார். ஆனால், இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் சுற்றறிக்கை, அரசின் கவனத்திற்கு வராமல் அனுப்பப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து ஜாதி அடையாளத்தை குறிக்கும் கயிறு கட்ட தடை விதித்த விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என்று கூறினார். பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கடந்த 31.7.19 தேதியில் வெளியான ஆர்சிஎண்: 30311/எம்./எஸ்1/2019 என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கைகளில் கயிறு அணியலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.